குங்குமப்பூ

testwiki இலிருந்து
imported>Tom8011 பயனரால் செய்யப்பட்ட 21:32, 18 பெப்ரவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Corrected spelling errors)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Taxobox

குங்குமப்பூ (Saffron) என்பது இரிடேசியே குடும்பத்தின் குரோக்கசு என்னும் இனத்தைச் சேர்ந்த சாஃப்ரன் குரோக்கசு (saffron crocus, குரோக்கசு சட்டைவசு) என்ற செடியின் பூவிலிருந்து தருவிக்கப்படும் ஒரு நறுமணப் பொருளாகும். குரோக்கசு சட்டைவசு பூவில் மூன்று சூலகமுடிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் சூல்வித்திலையின் நுனியில் உள்ளன. இப்பூவின் உலர்த்தப்பட்ட சூலகமுடிகளும் சூல் தண்டுகளும் (சூலக அவற்றின் வழங்கித் தாவரங்களுடன் இணைப்பவை) சமையலில் உணவுக்குச் சுவையூட்டும், வண்ணமூட்டும் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. நீண்டகாலமாக உலகின் மிக விலையுயர்ந்த நறுமணப் பொருளாக (எடையின் அடிப்படையில்) குங்குமப்பூ இருந்து வருகிறது.[1][2] இச்செடி தோன்றிய இடம் தென்மேற்கு ஆசியாவாகும்.[2][3]

குங்குமப்பூவின் கசப்புச் சுவை மற்றும் அயடபோர்ம் (iodoform) அல்லது வைக்கோல் போன்ற மணத்திற்கும் அதில் உள்ள பைக்ரோக்குரோசின் (picrocrocin), சாஃபிரானல் (safranal) ஆகிய வேதிப் பொருள்களே காரணம்.[4][5] குங்குமப்பூவில் கரோட்டின் வகை சாயமான (carotenoid dye) குரோசின் (crocin) இருப்பதால் அது உணவு வகைகளுக்கும் துணிகளுக்கும் தங்கம் போன்ற-மஞ்சள் வண்ணத்தைச் சேர்க்கப் பயன்படுகின்றது.

பன்மொழி பெயர் வரலாறு

குங்குமப்பூ ஆங்கிலத்தில் saffron என்றழைக்கப்படுகிறது இச்சொல் இலத்தீன் சொல்லான வார்ப்புரு:Lang என்பதிலிருந்து தோன்றிய 12 ஆம் நூற்றாண்டின் பழைய பிரான்சியச் சொல்லான safran என்பதிலிருந்து தோன்றியதாகும். Safranum என்ற இலத்தீன் சொல் زعفران (za'ferân) என்ற பாரசீகச் சொல்லிலிருந்து பிறந்தது. முதலில் இச்சொல் அரபியச் சொல்லான زَعْفَرَان (za'farān) என்பதிலிருந்தே வந்தது என்று சிலர் வாதிடுகிறார்கள்.(இந்த அரபியச் சொல் பெயர் உரிச்சொல்லான أَصْفَر (aṣfar, "மஞ்சள்") என்பதிலிருந்து உருவானது).[5][6] இருப்பினும் பாரசீகச் சொல்லான زرپران (zarparān ) - "மஞ்சள் இலைகளைக் கொண்டுள்ள" என்பதன் அரபிய மொழியாக்கப்பட்ட வடிவமே زَعْفَرَان (za'farān) என்ற ஒரு மாறுபட்ட பெயர் வரலாற்றையும் சிலர் முன்வைக்கின்றனர்.[7] வார்ப்புரு:Lang என்ற இலத்தீன் சொல்லே இத்தாலியச் சொல்லான zafferano என்ற சொல்லுக்கும் azafrán என்ற எசுப்பானிய சொல்லுக்கும் மூலமாகும்.[8]

உயிரியல்

வீட்டில் வளர்க்கப்படும் சாஃப்ரன் குரோக்கசு (குரோக்கசு சட்டைவசு) செடியானது இலையுதிர் காலத்தில் பூக்கின்ற பல்லாண்டுத் தாவரம் ஆகும், இது காட்டில் வளர்வதில்லை. அநேகமாக இது மத்திய ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டதும் கிழக்கு மத்தியதரைப் பகுதியில் காணப்படுவதுமான இலையுதிர் காலத்தில் பூக்கும் குரோக்கசு கார்ட்ரைட்டியனசு[9][10][11] (Crocus cartwrightianus ) என்ற வகையின் மலட்டு வடிவ மும்மடிய நிலையாக இருக்கலாம்.[5] நீளமான சூலகமுடிகளை உருவாக்க விரும்பிய பயிர்த்தொழிலாளர்கள் குரோக்கசு கார்ட்ரைட்டியன்சு (cartwrightianus) செடியை மிகப்பரந்த செயற்கைத் தேர்வு முறைக்கு உட்படுத்தியபோது உருவாகியதே சாஃப்ரன் குரோக்கசு இனமாகும். இவை மலட்டுத்தன்மை கொண்டவையாக இருப்பதால், இவற்றின் ஊதாநிறப் பூக்கள் வளம் மிக்க விதைகளை உருவாக்குவதில்லை. இவற்றின் இனப்பெருக்கத்திற்கு மனித உதவி தேவைப்படுகிறது. அதற்கு நிலத்துக்குக் கீழே இருக்கும் குமிழ் போன்ற மாச்சத்துச் சேமிக்கும் தண்டுக்கிழங்குகளைத் தோண்டி எடுத்து, சிறு துண்டுகளாக உடைத்து திரும்பவும் நடவேண்டும். இவ்வாறு நடப்படும் ஒரு தண்டுக்கிழங்கு ஒரு பருவம் வரை வாழும், இவை ஒவ்வொன்றும் இம்முறையில் பிரித்து நடுவதன் மூலம் பத்து வரையிலான புதிய தாவரங்களைக் கொடுக்கும்.[9] இந்தத் தண்டுக் கிழங்குகள் சிறிய, பழுப்பு நிறமான 4.5 செ.மீ வரையிலான விட்டத்தைக் கொண்ட சிறு கோள வடிவம் கொண்டவையாகும். இவை இணையான அமைப்பு கொண்ட நார்களாலான அடர்த்தியான காப்புறையைக் கொண்டிருக்கும்.

உருவியல்
கோலர்'ஸ் மெடிக்கல் பிளாண்ட்ஸ் (1887) இலிருந்து குரோக்கசு சட்டைவசு
கோலர்'ஸ் மெடிக்கல் பிளாண்ட்ஸ் (1887) இலிருந்து குரோக்கசு சட்டைவசு
 →  சூலகமுடி
 →  மகரந்தக் கேசரங்கள்
 →  அல்லிவட்டம்
 →  தண்டுக்கிழங்கு

கோடைகாலத் தூக்கத்துக்குப் பின்னர் இளவேனில் காலத்தில், இந்தத் தாவரத்தில் 5 முதல் 11 வரையிலான குறுகலாகவும், கிட்டத்தட்ட செங்குத்தாகவும் பச்சை இலைகள் துளிர்க்கின்றன. ஒவ்வொரு இலையும் 40 சென்டிமீட்டர் வரையிலான நீளம் கொண்டதாக இருக்கும். இலையுதிர் காலத்தில் ஊதாநிற மொட்டுகள் தோன்றுகின்றன. இவை அக்டோபர் மாதத்தில், (பெரும்பாலான பூக்கும் தாவரங்கள் தமது விதைகளை வெளியிட்டுவிட்ட பின்னரே), மிகச்சிறந்த நிறமுடைய பூக்களை உருவாக்குகின்றன. அவற்றின் நிறம் மென்மையான ஊதாவிலிருந்து அடர்த்தியான, பல வரிகளாக அமைந்த சாம்பல் கலந்த மென்மையான ஊதா நிறம் வரை வேறுபடுகின்றது.[12] பூக்கும் காலத்தில் இந்தத் தாவரங்களின் சராசரி உயரம் 30 செண்டிமீட்டருக்கும் குறைவாக உள்ளன.[13] ஒவ்வொரு பூவிலிருந்தும் மூன்று நீட்சிகளை உடைய சூல்தண்டுகள் உருவாகின்றன. அவை ஒவ்வொன்றின் முனையிலும் 25-30 மி.மீ குறுக்களவுள்ள, பளிச்சென்று தெரியும், கருஞ்சிவப்பு நிறமுள்ள சூலகமுடிகள் காணப்படுகின்றன.[9]

சாகுபடி

ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் உள்ள சாஃப்ரன் குரோக்கசு

குரோக்கசு சட்டைவசு மத்தியதரைக் கடல் மாக்குவிசு (வட அமெரிக்க புதர்க்காடுகளை ஒத்தவை) பகுதிகளிலும் அவற்றை ஒத்த காலநிலை நிலவும் பகுதியிலும் அதிகமாக வளர்கின்றன. இப்பகுதிகளில் ஓரளவு வறண்ட நிலங்களில் வெப்பமான, உலர்ந்த கோடைத் தென்றல் காற்று வீசும் காலநிலை நிலவுகிறது, இது போன்ற காலநிலையே குங்குமப்பூ வளர மிக ஏற்ற காலநிலையாகும். இருப்பினும் இவை குளிர்காலங்களிலும் 10°செ அளவு வரையிலான உறைபனிகளையும் தாங்கி வாழக்கூடியவை. மேலும் குளிர்மிகுந்த பனிக்கட்டி மூடியிருக்கும் சூழலிலும் சிறிது காலம் வாழக் கூடியவையாகும்.[9][14] 1000-1500 மி.மீ அளவிலான சராசரி ஆண்டு மழை பொழிவைக் கொண்டுள்ள காஷ்மீர் போன்ற குளிச்சியான சூழல்களில் குங்கப்பூ பயிரிட நீர்ப்பாசனம் தேவைப்படும். எடுத்துக்காட்டாக, ஈரானில் இச்செடிகள் வளர்கின்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் கிரேக்க நாடு (ஆண்டு மழைபொழிவு 500மி.மீ.) மற்றும் எசுப்பானியா (ஆண்டு மழைபொழிவு 20 மி.மீ.) ஆகிய நாடுகளிலுள்ள குங்குமப்பூச் செடி வளர்கின்ற இடங்கள் மிகவும் வறண்டவை. ஆனால் இவ்விடங்களில் மழைக் காலம் சாகுபடிக்கு உகந்தவாறு அமைந்திருப்பதால் பயிரிடல் சாத்தியமாகிறது.

குங்குமப்பூ சாகுபடிக்கு காலநேரமே மிக முக்கியம் - வளமான மழை நிறைந்த இளவேனில் காலமும் உலர்ந்த கோடைக்காலமும் இதற்கு மிக உகந்தவையாகும். பூப்பதற்கு சற்று முன்னர் வரும் மழை பொழிவு குங்குமப்பூவின் விளைச்சலை ஊக்குவித்து அதிகமாக்குகிறது. பூக்கின்ற காலத்தில் மழை அல்லது குளிரான காலநிலை இருந்தால், அது நோயைத் தூண்டி விளைச்சலைக் குறைக்கும். தொடர்ச்சியான ஈரம் கொண்ட அல்லது வெப்பமான காலநிலை தாவரங்களுக்குத் தீங்கை விளைவிக்கும்.[15] மேலும் முயல்களும் எலிகளும் பறவைகளும் குழிகள் தோண்டி பயிர்களை நாசம் செய்கின்றன. இவை தவிர உருளைப் புழுக்களும், இலைத் துருக்களும், தண்டுக்கிழங்கு அழுகல்களும் பிற அச்சுறுத்தல்களாகும்.

நிழல் மிகுந்த சூழ்நிலைகளில் இத்தாவரங்கள் சரியாக வளருவதில்லை. நல்ல சூரிய ஒளியில் அவை மிகச்சிறப்பாக வளர்கின்றன. எனவே சூரிய ஒளியை நோக்கி சரிவாக அமைந்த நிலப்பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது (அதாவது, வட அரைக்கோளப் பகுதிகளில் தெற்குச் சாய்வுள்ள நிலங்கள்). வட அரைக்கோளத்தில் பெரும்பாலும் சூன் மாதத்திலேயே விதைப்பு நடக்கிறது. அங்கு தண்டுக்கிழங்குகள் 7 முதல் 15 செ.மீ. வரையிலான ஆழத்தில் நடப்படுகின்றன. கிழங்குகள் எவ்வளவு ஆழமாக நடப்படுகின்றன, தண்டுக்கிழங்குகளுக்கு இடையே எவ்வளவு இடைவெளி விடப்படுகிறது, காலநிலை ஆகிய இம்மூன்றும் விளைச்சலைப் பாதிக்கின்ற முக்கியமான காரணிகளாகும். அதிக ஆழத்தில் நடப்பட்ட மூலத் தண்டுக்கிழங்குகள் உயர் தரமான குங்குமப்பூக்களை விளைவிக்கின்றன, எனினும் இவை குறைவான மொட்டுகளையும் சேய்த் தண்டுக்கிழங்குகளையும் கொடுக்கின்றன. இத்தாலிய பயிர்த்தொழிலாளிகள் 15 செ.மீ. ஆழத்திலும் 2–3 செ.மீ இடைவெளியிலுள்ள வரிசைகளிலும் கிழங்குகளை நடுவதன் மூலம் இழைகளின் விளைச்சலை அதிகரிக்கிறார்கள். 8–10 செ.மீ. ஆழம் பூ மற்றும் தண்டுக்கிழங்கு விளைச்சலுக்கு உகந்ததாகும். கிரேக்க, மொராக்கிய மற்றும் எசுப்பானிய பயிர்த்தொழிலாளிகள் தங்கள் இடங்களுக்கு ஏற்ற வேறுபட்ட ஆழங்கள் மற்றும் இடைவெளிகளைப் பயன்படுத்துகின்றனர்.

குங்குமப்பூ சாகுபடிக்கு உயர் கரிமப் பொருள்களைக் கொண்ட, எளிதில் தூள்தூளாகக் கூடிய தளர்வான, அடர்த்தி குறைந்த, நன்கு நீர்பாய்ச்சப்பட்ட, நன்கு நீர் வடிக்கப்பட்ட சுண்ணாம்பு நிறைந்த களி மண் வகைகள் (clay-calcareous) உகந்தவை. பாரம்பரியமான மேட்டுப்பாத்தி முறைகளில் நீர் வடிதல் சிறப்பாக உள்ளது. முற்காலத்தில் ஹெக்டேர் ஒன்றுக்கு 20–30 டன்கள் எருவைச் சேர்ப்பதன் மூலம் மண்ணின் கரிம வளம் அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு எரு சேர்க்காமலே தண்டுக்கிழங்குகள் நடப்பட்டன.[16] கோடைகாலத்தில் உறக்க நிலையில் உள்ள தண்டுக்கிழங்குகள், இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் தமது குறுகலான இலைகளைத் துளிர்த்து, மொட்டு விடத் தொடங்குகின்றன. இலையுதிர் காலத்தின் மத்திய பகுதியில் அவை பூக்கின்றன. காலையில் மலரும் பூக்கள் மாலைக்குள் வாடத் தொடங்கிவிடுகின்றன என்பதால் அறுவடையை மிக வேகமாகச் செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.[17] ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் எல்லாச் செடிகளும் பூக்கின்றன.[18] தோராயமாக 150 பூக்களிலிருந்து 1 கிராம் உலர்ந்த குங்குமப்பூ இழைகள் கிடைக்கின்றன. 12 கி உலர்ந்த குங்குமப்பூவைப் பெற (புதிதாக சாகுபடி செய்த குங்குமப்பூ 72 கி எடை இருக்கும்) 1 கிலோ பூக்கள் தேவைப்படுகின்றன. புதிதாகப் பறிக்கப்பட்ட ஒரு பூவிலிருந்து சராசரியாக 30 மி.கி. (0.46 கி) உலரா குங்குமப்பூ அல்லது 7 மி.கி. (0.11 கி) உலர்ந்த குங்குமப்பூ கிடைக்கும்.[16]

வேதியியல்

குரோசின்
α–குரோசின் உருவாக்க முறை
α–குரோசின் உருவாக்க முறை

குரோசெட்டின் மற்றும் செண்டியோபயோசு ஆகியவற்றுக்கு இடையிலான எசுத்தராக்குதல் தாக்கம்
 —  β-டி-செண்டியோபயோசு
 —  குரோசெட்டின்
பிக்ரோகுரோசின் மற்றும் சாஃப்ரானல்
குங்குமப்பூ வண்ணம் தீட்டப்பட்ட சாஃப்ரானல் பங்குடனான பிக்ரோகுரோசின்
குங்குமப்பூ வண்ணம் தீட்டப்பட்ட சாஃப்ரானல் பங்குடனான பிக்ரோகுரோசின்

பிக்ரோகுரோசின்[19] வேதியியல் அமைப்பு
 —  சாஃப்ரானல் பங்கு
 —  β-டி-குளுக்கோபைரனோசு வழிவருவித்தது

குங்குமப்பூவில் எளிதில் ஆவியாகின்ற, நறுமணம் தருகின்ற 150 க்கும் அதிகமான சேர்மங்கள் உள்ளன. இதில் பல ஆவியாகாத செயல்மிகு கூறுகளும் உள்ளன.[20] இவற்றில் சியாக்காந்தின் (zeaxanthin), லைக்கோப்பீன் (lycopene) மற்றும் பல்வேறு வகையான ஆல்ஃபா (α) மற்றும் பீட்டா-கரோட்டின்கள் ஆகியவை உள்ளிட்ட பல பொருள்களும், கரோட்டின் வகையினங்களும் உள்ளன. எனினும், குங்குமப்பூவின் தங்கம் போன்ற மஞ்சள்-செஞ்சிவப்பு நிறத்திற்கு பெரும்பாலும் ஆல்ஃபா (α) குரோசினே காரணம். இந்தக் குரோசின் டிரான்சு-குரோசெட்டின் இரு-(β-டி-ஜெண்டியோபயோசில்) எசுத்தர் (முறையான (ஐ.யு.பி.ஏ.சி) பெயர்: 8,8-டயப்போ-8,8-கரோட்டினாய்க் காடி) ஆகும். இதிலிருந்து குங்குமப்பூவின் நறுமணத்திற்குக் காரணமாக உள்ள இந்தக் குரோசின் கரோட்டின் வகையின குரோசெட்டினின் (carotenoid crocetin) டைச்செண்டியோபியோசு எசுத்தராகும் (digentiobiose ester) என்பது தெரிகிறது.[20] குரோசின்கள் நீர் விரும்பும் கரோட்டின் வகைகளின் ஒரு தொடர். இவை குரோசெட்டினின் மானோகிளைக்கோசில் (monoglycosyl) அல்லது டைகிளைக்கோசில் பாலீன் எசுத்தர்கள் ஆகும்.[20] குரோசெட்டின் என்பது ஓர் இணைக்கப்பட்ட பாலீன் டைகார்பாக்ஃசிலிக் அமிலம். இது நீர் வெறுக்கும் தன்மையுள்ளது.; ஆகவே எண்ணெயில் கரையக்கூடியது. குரோசெட்டினை நீரில் கரையக்கூடிய இரண்டு செண்டியோபயோசுகளுடன் (இவை சர்க்கரைகள்) எசுத்தராக்கப்படும் போது உருவாகும் விளைபொருள் நீரில் கரையக்கூடியதாகவே இருக்கும். இதன் விளைபொருளான α-குரோசின் ஒரு கரோட்டின் வகையின நிறப்பொருளாகும். உலர்ந்த குங்குமப்பூவின் நிறையில் 10% க்கும் கூடிய அளவில் இது இருக்கலாம். இந்த எசுத்தராக்கப்பட்ட இரு செண்டியோபயோசுகளின் காரணமாக α-குரோசின், அரிசி உணவுகள் போன்ற நீர் அடிப்படையான (கொழுப்பில்லாத) உணவுகளுக்கு வண்ணமூட்டுவதற்கு உகந்ததாகிறது.[21]

வேதியியல் சேர்மானம்
கூறு நிறை %
கார்போஐதரேட்டுகள் 12.0–15.0
தண்ணீர் 9.0–14.0
பல்பெப்டைட்டுகள் 11.0–13.0
மாவியம் (செல்லுலோசு) 4.0–7.0
கொழுப்புகள் 3.0–8.0
தாதுக்கள் 1.0–1.5
மற்றவை
நைதரசன் அல்லாதவை
40.0
மூலம்: வார்ப்புரு:Harvnb
தோராய பகுப்பாய்வு
கூறு நிறை
நீரில் கரையக்கூடிய கூறுகள் 53.0
  →  கோந்துகள் 10.0
  →  பெண்டோசன்கள் 8.0
  →  பெக்டின்கள் 6.0
  →  மாச்சத்து 6.0
  →  α–குரோசின் 2.0
  →  பிற கரோட்டின் வகைகள் 1.0
கொழுப்புகள் 12.0
  →  எளிதில் ஆவியாகாத எண்ணெய்கள் 6.0
  →  எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் 1.0
புரதம் 12.0
உயிரியல் சாராத பொருள்("சாம்பல்") 6.0
  →  HCl-இல் கரையக்கூடிய சாம்பல் 0.5
தண்ணீர் 10.0
நார் (பண்படாத) 5.0
மூலம்: வார்ப்புரு:Harvnb

குங்குமப்பூவின் சுவைக்கு கசப்பான குளுக்கோசைட்டு பிக்ரோகுரோசினே காரணமாகும். பிக்ரோகுரோசின் (வேதியியல் வாய்பாடு: வார்ப்புரு:Chem; முறையான பெயர்: 4-(β-டி-குளுக்கோபைரனோசிலாக்ஃசி)-2,6,6- டிரைமீத்தைல்சைக்ளோஃகெக்ஃசு-1-ஈன்-1-கார்பொக்சல்டிஃகைட்) என்பது சாஃப்ரானல் (முறையான பெயர்: 2,6,6-டிரைமீத்தைல்சைக்ளோஃகெக்ஃசா-1,3-டையீன்-1- கார்பொக்சல்டிஃகைட்) எனப்படுகின்ற ஓர் ஆல்டிஃகைடு துணைக்கூறு, ஒரு கார்போஐதரேட்டு ஆகியவற்றின் கூட்டு ஆகும். இதற்கு பூச்சிக்கொல்லிப் பண்புகளும் உயிர்க்கொல்லிப் பண்புகளும் உள்ளன. இவை உலர்ந்த குங்குமப்பூவின் நிறையில் 4% வரையிலான அளவு இருக்கலாம். பிக்ரோகுரோசின் என்பது கரோட்டின் வகையான சியாகாந்தினின் (zeaxanthin) குறைக்கப்பட்ட ஒரு வடிவமென்பது குறிப்பிடத்தக்கது (ஆக்சிசனேற்ற பிளவு மூலம் உருவாக்கப்படும்). மேலும் இது டெர்ப்பீன் அல்டிஃகைட்டு சாஃப்ரானலின் கிளைக்கோசைடாகும். சிவப்பு நிறமுள்ள[22] சியாக்காந்தின் மனித விழித்திரையில் இயற்கையாகவே காணப்படுகின்ற ஒரு கரோட்டின் வகையின நிறப்பொருள்களில் ஒன்று.

அறுவடைக்குப் பின்னர் குங்குமப்பூவை உலர்த்தும்போது வெப்பத்தினாலும் நொதியச் செயற்பாட்டாலும் பிக்ரோகுரோசின் பிரிந்து டி-குளுக்கோசும், ஒரு கட்டற்ற சாஃப்ரானல் மூலக்கூறும் உருவாகின்றன.[19] எளிதில் ஆவியாகும் எண்ணெயான சாஃப்ரானலே குங்குமப்பூவின் தனித்துவ நறுமணத்திற்கு பெருங்காரணமாக உள்ளது.[4][23] பிக்ரோகுரோசினை விட சாஃப்ரானல் கசப்பு குறைவானதாகும். இது உலர்ந்த குங்குமப்பூவின் சில மாதிரிகளில், எளிதில் ஆவியாகும் பகுதியின் நிறையில் 70% வரையிலான அளவைக் கொண்டுள்ளது.[22] குங்குமப்பூவின் நறுமணத்துக்குக் காரணமாக உள்ள இரண்டாவது கூறு 2-ஐதராக்ஃசி-4,4,6-டிரைமீத்தைல்-2,5-சைக்ளோஃகெக்சாட்டீன்-1-ஒன் ஆகும். "குங்குமப்பூ, உலர்ந்த வைக்கோல் போல மணம் கொண்டது" என விவரிக்கப்படுவதற்கு இதன் நறுமணமே காரணமாகும்.[24] சாஃப்ரானலைவிட இது குறைந்த அளவிலேயே காணப்படுகின்ற போதிலும், குங்குமப்பூவின் நறுமணத்துக்கு இதுவே மிகுந்த சக்திவாய்ந்த பங்களிப்பை வழங்குவதாக வேதியியலாளர்கள் கண்டுபிடித்தனர்.[24] உலர்ந்த குங்குமப்பூ அடிக்கடி மாறும் பி.எச் அளவுகளால் அதிகம் பாதிக்கப்படும் தன்மை கொண்டது. ஒளியும், ஆக்சிஜனேற்ற காரணிகளும் இருக்கும்போது வேதியியல் வகையில் விரைவாகப் பிரிகை அடைகின்றன. ஆகவே வளிமண்ட ஆக்சிசனுடனான தொடர்பைக் குறைக்கும் பொருட்டு உலர்ந்த குங்குமப் பூவை காற்றுப் புகாத கொள்கலன்களில் சேமிக்க வேண்டியது கட்டாயமாகும். குங்குமப்பூ ஓரளவு வெப்பத்தைத் தாங்கக்கூடியதாகும்.

வரலாறு

"செஸ்டே 3" ("Xeste 3") கட்டடத்தில் காணப்படும் "குங்குமப்பூ சேகரிப்பாளர்களைச்" சித்தரிக்கும் சுவரோவியம். அக்ரோடிரி, சந்தோரினியின் வெண்கலக் கால குடியேற்றத்தில் காணப்பட்ட குங்குமப்பூ பற்றிய பல சுவரோவியங்களில் இதுவும் ஒன்று.

குங்குமப்பூச் செடியின் சாகுபடி வரலாறு 3,000 க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முற்பட்டது.[25] வீட்டில் வளர்க்கப்படும் குங்குமப்பூவுக்கு முன்னோடி காட்டுக்குரிய குரோக்கசு கார்ட்ரைட்டியானசு ஆகும். வழக்கத்துக்கு மாறாக நீளமான சூலகமுடிகளைக் கொண்டவற்றைத் தெரிந்தெடுத்ததன் மூலம் விவசாயிகள் காட்டுக்குரிய மாதிரிகளை இனவிருத்தி செய்தனர். இவ்வாறு வெண்கலக் காலத்தில் கிரீட் தீவில் குரோக்கசு கார்ட்ரைட்டியானசின் மலட்டு வகையான குரோக்கசு சட்டைவசு வகை உருவானது.[26] குங்குமப்பூ முதன்முதலில் அசிரிய மன்னன் அசுரினிப்பாலின் ஆணைப்படி கி.மு 7 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட தாவரவியல் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். சுமார் 90 நோய்களுக்கான சிகிச்சையில் குங்குமப்பூவின் பயன்பாடு 4,000 ஆண்டுகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.[27]

ஆசியா

கி.பி 978-993 வரையிலான காலப்பகுதிய [84] ஒற்றைக் கல்லால் ஆன கோமதீஸ்வரர் சிலைக்கு, ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடக்கும் மகா மஸ்தகாபிஷேக திருவிழாவின் ஒரு பகுதியாக அங்குகூடும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் குங்குமப்பூ அபிஷேகம் செய்யப்படுகிறது.

வடமேற்கு ஈரானில் உள்ள, வரலாற்றுக்கு முந்தைய இடங்களில், 50,000 ஆண்டுகள் பழைமையான ஓவியங்களில் குங்குமப்பூவிலான நிறப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[28][29] பின்னர், சுமேரியர்கள் தமது மருந்துகளிலும், மாய பானங்களிலும் காட்டில் வளருகின்ற குங்குமப்பூவைப் பயன்படுத்தினார்கள்.[30] மினோவ மாளிகை நாகரிகத்தின் கி.மு 2 ஆம் நூற்றாண்டு உச்சகாலத்துக்கு முன்னர் குங்குமப்பூ நீண்ட தூர வர்த்தகப் பொருளாக இருந்தது. கி.மு 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்பாக புராதன பாரசீகர்கள், பாரசீக குங்குமப்பூவை (குரோக்கசு சட்டைவசு 'Hausknechtii') டெர்பினா, இஸ்ஃபஹான், கோரசான் ஆகிய இடங்களில் பயிரிட்டார்கள். இந்த இடங்களில் குங்குமப்பூ நூல்கள் துணிகளாக நெசவு செய்யப்பட்டன.[31] அவை தெய்வங்களுக்குச் சமயச்சடங்குகளில் படையலாக்கப்பட்டன; மேலும் சாயங்களிலும், நறுமணத் திரவியங்களிலும், மருந்துகளிலும், உடல் கழுவும் பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டன.[32] பாரசீகத்தில் குங்குமப்பூ நூல்களை படுக்கைகள் முழுதும் தூவுவதற்கும், துக்க மனநிலைக்கான ஒரு சிகிச்சையாக சூடான தேனீரில் கலந்து குடிக்கவும் பயன்பட்டன. வெறிமயக்கப் பொருளாகவும், பாலுணர்ச்சி ஊக்கியாகவும் குங்குமப்பூவை பாரசீகர்கள் பயன்படுத்துவது குறித்து பாரசீகர் அல்லாதவர்கள் பயமும் கொண்டார்கள்.[33] மகா அலெக்சாண்டர் தனது ஆசியப் போர் நடவடிக்கைகளின் போது, போர்க் காயங்களைக் குணப்படுத்தும் மருந்தாக தனது கரைசல்கள், சாதம் மற்றும் குளியல்களில் பாரசீக குங்குமப்பூவைப் பயன்படுத்தினார். அலெக்சாண்டரின் படைவீரர்கள் பாரசீகர்களிடமிருந்து குங்குமப்பூக் குளியல் பழக்கத்தைப் பழகி, அதனைக் கிரேக்க நாட்டுக்குக் கொண்டுவந்தார்கள்.[34]

தெற்காசியாவிற்கு குங்குமப்பூவின் வருகை பற்றி விளக்கும் முரண்பட்ட கோட்பாடுகள் உள்ளன. 900–2500 ஆண்டுகளுக்கு முன்னதாக இது வந்ததாக காஷ்மீரி மற்றும் சீன ஆவணப் பதிவுகள் கூறுகின்றன.[35][36][37] பண்டைய பாரசீகப் பதிவுகளை ஆய்வுசெய்கின்ற வரலாற்றாளர்கள் இது கி.மு 500 -க்கு சிறிது காலம் முன்னர் பாரசீகத்துக்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.[21]

இந்த வருகை பாரசீகர்கள் காஷ்மீர் மீது படையெடுத்து குடியேறியதனாலோ அல்லது புதிய பூங்காக்களிலும் தோட்டங்களிலும் குங்குமப்பூ பயிரிட அவற்றின் தண்டுகளை மாற்று நடவு செய்ததனாலோ நிகழ்ந்திருக்கலாம்.[38] பின்னர் காஷ்மீர் குங்குமப்பூவை ஒரு சாயமாகவும், மனச்சோர்வுக்கான ஒரு சிகிச்சையாகவும் போனீசியர்கள் விற்பனை செய்தார்கள்.[33] அங்கிருந்து, உணவுப்பொருள்களிலும் சாயங்களிலும் குங்குமப்பூவின் பயன்பாடு தெற்காசியா முழுவதும் பரவியது. இந்தியாவிலுள்ள புத்தத் துறவிகள் கௌதம புத்தரின் இறப்புக்குப் பின்னர் குங்குமப்பூ வண்ணத்திலான அங்கிகளை ஏற்றுக்கொண்டனர்.[39] இருந்தபோதிலும், அந்த அங்கிகள் விலையுயர்ந்த குங்குமப்பூவால் சாயமேற்றப்படாமல் செலவு குறைந்த மஞ்சள் அல்லது பலாப்பழத்தால் சாயமேற்றப்பட்டது.[40]. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் குங்குமப்பூவைப் பயன்படுத்தி வருகிறார்கள். தமிழில் இது "ஞாழல் பூ" என அழைக்கப்படுகிறது. தலைவலியைக் குணப்படுத்த, வலியில்லாத குழந்தை பிறப்பு, இன்னும் பலவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

குங்குமப்பூ பாரசீகத்திலிருந்து மங்கோலிய படையெடுப்பாளர்களுடன் சீனாவுக்கு வந்தது என சில வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள்.[41] அதே சமயம், கி.மு 200–300 காலத்திய மருத்துவப் பெருநூலான ஷென்னாங் பென்கவோஜிங் (Shennong Bencaojing - 神農本草經—"ஷென்னாங் கிரேட் ஹெர்பல்", இதை Pen Ts'ao அல்லது Pun Tsao என்றும் அழைப்பர்) உட்பட பல பழமைமிக்க சீன மருத்துவ உரைகளிலும் குங்குமப்பூ குறிப்பிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தைப் பிரசித்தி பெற்ற யான் ("தீ") பேரரசர் (炎帝) ஷென்னாங் எழுதியதாகக் கருதப்படும் மரபு உள்ளது. இது பல்வேறு நோய்களுக்கான, 252 தாவர வேதியியல் அடிப்படையான மருத்துவ சிகிச்சைகளை ஆவணப்படுத்துகிறது.[42][43] இருப்பினும் கி.பி 3 ஆம் நூற்றாண்டளவில், குங்குமப்பூவின் பிறப்பிடம் காஷ்மீர் என சீனர்கள் குறிப்பிட்டார்கள். எடுத்துக்காட்டாக, சீன மருத்துவ நிபுணரான வான் ஜென், "குங்குமப்பூவின் வாழ்விடம் காஷ்மீரில் உள்ளது. அங்குள்ள மக்கள் முக்கியமாக இதை புத்தருக்கு படைப்பதற்காக வளர்க்கிறார்கள்" என்று தெரிவித்தார். தனது காலத்தில் எவ்வாறு குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டது என்பது பற்றியும் வான் குறிப்பிட்டுள்ளார்: "[சாஃப்ரன் குரோக்கசு] பூவானது சில நாட்களுக்கு பின்னர் வாடுகிறது. அதன் பின்னர் குங்குமப்பூ பெறப்படுகிறது. இதன் ஒரேசீரான மஞ்சள் வண்ணத்துக்காக மதிப்பு பெற்றுள்ளது. ஒயினுக்கு நறுமணமூட்டவும் இதைப் பயன்படுத்தலாம்."[37]

ஐரோப்பா/மத்தியதரைக் கடல் பகுதி

கி.மு 1500-1600க்கு முன்பே, மினோவர்கள் தமது மாளிகைச் சுவரோவியங்களில் குங்குமப்பூவைச் சித்தரித்துள்ளனர். அந்த ஓவியங்கள் குங்குமப்பூ ஒரு குணப்படுத்தும் மருந்தாக பயன்பட்டதைக் காண்பிக்கின்றன.[27][44] பின் வந்த கிரேக்க புராணக்கதைகள் சிலிசியா (Cilicia) வுக்கான கடற் பயணங்களைப் பற்றிக் கூறுகின்றன. அப்பயணங்களில் கிரேக்க சாகசக்காரர்கள் உலகத்தின் மிகவும் பெருமதிப்பு மிக்கதெனத் தாங்கள் நம்பிய குங்குமப்பூவையே சேகரித்து எடுத்துவர எண்ணுகின்றனர்.[45] இன்னொரு புராணக் கதை குரோக்கசு மற்றும் இசுமைலாக்ஃசு ஆகியோரைப் பற்றிக் கூறுகிறது. இக்கதையில் குரோக்கசு மதிமயக்கப்பட்டு முதல் சாஃப்ரன் குரோக்கசு செடியாக மாற்றப்படுகிறான்.[46] புராதன காலத்து மத்தியதரைக் கடல் பகுதி மக்கள் —எகிப்திலுள்ள நறுமணப்பொருள் தயாரிப்பவர்கள், காசாவிலுள்ள மருத்துவர்கள், ரோட்சு,[47] மற்றும் கிரேக்க ஃகெட்டரே விலைமகள்கள் உள்ளடங்கலாக—தமது நறுமணமூட்டிய தண்ணீர்கள், நறுமணப் பொருள்கள், களிம்புகள்,[48] கலவைகள், கண்ணிமைச் சாயக்கலவைகள் (மசுக்காராக்கள்), தெய்வீகப் படையல்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளில் குங்குமப்பூவைப் பயன்படுத்தினார்கள்.[48]

கிரீட்டின் நோசஸ் நகரத்தில் (Knossos) உள்ள இந்த புராதன மினோவர் சுவரோவியம் ஒரு மனிதர் (குனிந்த நிலையில் உள்ள நீல நிற உருவம்) குங்குமப்பூ அறுவடை செய்வதைக் காண்பிக்கிறது.

பிந்தைய ஹெல்லனிய எகிப்தில் (Hellenistic Egypt), கிளியோபாட்ரா உடலுறவில் அதிக இன்பம் கிடைக்கும் என்ற காரணத்திற்காக குளியலுக்கு குங்குமப்பூவைப் பயன்படுத்தினார்.[49] எகிப்திய சிகிச்சையாளர்கள் அனைத்து வகையான இரைப்பை குடல்சார்ந்த நோய்களுக்கும் குங்குமப்பூவை ஒரு சிகிச்சையாகப் பயன்படுத்தினர்.[50] சிடோன் மற்றும் டயர் போன்ற லேவண்ட் நகரங்களில் ஒரு துணிச் சாயமாகவும் குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டது.[51] ஆலஸ் கார்னேலியஸ் செல்சஸ் என்பவர் காயங்கள், இருமல், வலி மற்றும் சிரங்கு ஆகியவற்றுக்கான மருந்துகளிலும், மித்ரிடேட்டியம் (mithridatium) மருந்திலும் குங்குமப்பூவைச் சேர்த்துள்ளார்களெனக் குறிப்பிட்டுள்ளார்.[52] உரோமர்கள் குங்குமப்பூவின் மீது அதீத காதல் கொண்டவர்கள். ரோமக் குடியேற்றவாசிகள் தெற்கு காலில் (Gaul) காலனிகளை அமைத்த போது தம்முடன் குங்குமப்பூவையும் எடுத்துச் சென்றனர். ரோமர்களின் ஆட்சி முடியும் வரை அங்கு மிகப்பரந்தளவில் இச்செடி பயிரிடப்பட்டிருந்தது. கி.பி 8 ஆம் நூற்றாண்டு மூர் இன மக்களுடன் அல்லது கி.பி 14 ஆம் நூற்றாண்டில் அவிக்னான் போப்பாண்டவர் பதவிக் காலத்துடன் குங்குமப்பூவானது பிரான்சுக்குத் திரும்பி வந்தது என்று மாறுபட்ட கோட்பாடுகள் கூறுகின்றன.[53]

இது, கேன்டர்பரி பேராயர் தாமஸ் பெக்கெட் படுகொலையைச் சித்தரிக்கும், 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த படத்துடன் கூடிய ஆவணம். இது போன்ற இடைக்கால ஐரோப்பியர்களின் படத்துடன் கூடிய ஆவணங்களில் மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் வண்ணங்களை உருவாக்குவதற்காக பெரும்பாலும் குங்குமப்பூச் சாயங்கள் பயன்பட்டன.

ஐரோப்பிய குங்குமப்பூப் பயிர் செய்கை ரோமர்களின் ஆட்சி வீழ்ச்சியுற்றதைத் தொடர்ந்து வெகுவாகக் குறைந்தது. இஸ்லாமிய நாகரிகத்தின் பரவலால் எசுப்பானியம், பிரான்சு மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் குங்குமப்பூ மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.[54] 14 ஆம் நூற்றாண்டின் கறுப்பு இறப்பு காலத்தின்போது, மருந்துக்கான குங்குமப்பூ தேவை மிக உயர்ந்தது. அதிகளவான குங்குமப்பூவை வெனிசிய மற்றும் ஜெனோவிய கப்பல்கள் வழியாக ரோட்ஸ் போன்ற தென் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதி நிலங்களிலிருந்து[55] இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோன்று குங்குமப்பூவை ஏற்றி வந்த கப்பல்களில் ஒன்றை மேன்மக்கள் திருடியதால் பதினான்கு வாரங்களுக்கு நீடித்த "குங்குமப்பூப் போர்" மூண்டது.[55] இந்தப் போர் மற்றும் அதனால் விளைந்த மூர்க்கத்தனமான குங்குமப்பூக் கடற்கொள்ளை பற்றிய பயம் ஆகியவற்றின் காரணமாக பேசல் நகரில் குங்குமப்பூப் பயிர் செய்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது, இதனால் பேசல் நகரம் செழித்தது.[56] இதன் பின்னர் குங்குமப்பூ பயிர் செய்கையும், வர்த்தகமும் நியூரம்பெர்க் நகருக்குப் பரவியது. இங்கு, குங்குமப்பூ கலப்படம் அதிகமாக இருந்ததால் சாஃரான்ஸ்சு (Safranschou ) என்னும் சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி, குங்குமப்பூக் கலப்படத்தில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, சிறைத் தண்டனையும் மரண தண்டனையும் வழங்கப்பட்டது.[57]

இதற்குப் பின்னர், குங்குமப்பூ பயிரிடல் இங்கிலாந்து முழுவதும - குறிப்பாக நார்ஃபால்க் மற்றும் சஃப்பால்க் பகுதிகளில் - பரவியது. எசெக்சில் உள்ள சாஃப்ரன் வால்டன் சந்தை நகரம் (குங்குப்பூ பயிரிடலால் இப்பெயர் ஏற்பட்டது) குங்குமப்பூ பயிரிட்டு வர்த்தகம் செய்யும் இங்கிலாந்தின் பிரதான மையமாக வளர்ந்தது. இருப்பினும், புதிதாகத் தொடர்பு ஏற்பட்ட கிழக்கு மற்றும் வெளி நாடுகளிலிருந்து சாக்கலேட், காப்பி, தேயிலை மற்றும் வனிலா போன்ற அதிகளவு வேற்றுநாட்டுப் பொருள்களின் வருகையால் ஐரோப்பிய நாடுகளில் குங்குமப்பூவின் பயிர் செய்கையும் பயன்பாடும் குறைந்தது.[58][59] தெற்கு பிரான்சு, இத்தாலி மற்றும் எசுப்பானியம் ஆகிய நாடுகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவு பயிர் செய்கை நீடித்திருந்தது.[60]

ஸ்வெங்ஃபெல்டர் தேவாலயக் (Schwenkfelder Church) குடிபெயர்வாளர்கள் ஐரோப்பாவிலிருந்து வெளியேறி அமெரிக்கா சென்றபோது தங்களுடன் குங்குமப்பூ தண்டுக்கிழங்குகளை ஒரு பெட்டியில் எடுத்துச் சென்றனர். இவ்வாறு ஐரோப்பியர்களே குங்குமப்பூவை அமெரிக்காவுக்குக் கொண்டு வந்தார்கள். ஸ்வெங்ஃபெல்டரைச் சேர்ந்தவர்கள் பலரும் முன்னர் ஐரோப்பாவில் பரந்தளவில் குங்குமப்பூவை பயிரிட்டு வந்திருந்தனர்.[61] 1730 ஆம் ஆண்டளவில், பென்சில்வேனியா டச்சுக்காரர்கள் குங்குமப்பூவை கிழக்கு பென்சில்வேனியா முழுவதுமாக பயிரிட்டிருந்தார்கள். கரீபியப் பகுதிகளின் எசுப்பானிய காலனியர்கள் இந்த புதிய அமெரிக்க குங்குமப்பூவை பெருமளவில் வாங்கியதாலும் குங்குமப்பூவுக்கான கிராக்கி அதிகரித்ததாலும் பிலடெல்ஃபியா பண்டச் சந்தை விலைப் பட்டியலில் குங்குமப்பூவின் விலை தங்கத்துக்கு நிகராக உயர்ந்தது.[62] 1812 ஆம் ஆண்டு போரின் போது குங்குமப்பூ சரக்குக் கப்பல்கள் பல அழிக்கப்பட்டன; இதனால் கரீபியப் பகுதிகளுடனான குங்குமப்பூ வணிகம் வீழ்ச்சியுற்றது.[63] எனினும் பென்சில்வேனிய டச்சுக்காரர்கள் உள்ளூர் வணிகத்துக்காகவும், தங்கள் கேக்குகள், நூடுல்ஸ் மற்றும் கோழி அல்லது நன்னீர் மீன் உணவுகளில் பயன்படுத்துவதற்காகவும் குறைந்த அளவுகளில் குங்குமப்பூவைத் தொடர்ந்து பயிரிட்டு வந்தனர்.[64] அமெரிக்காவில் குங்குமப்பூப் பயிர் செய்கை - முக்கியமாக லான்காஸ்டர் கவுண்டி, பென்சில்வேனியாவில் - தற்காலம் வரையிலும் தொடர்ந்தது.[61]

வணிகமும் பயனும்

எசுப்பானிய பயெயா வாலென்சியானா (paella valenciana) என்ற உணவின் (இது பிரியானி போன்றது) மூன்று முக்கியமான மூலப்பொருள்களில் குங்குமப்பூ ஒன்றாகும். அவ்வுணவின் சிறப்பான பிரகாசமான மஞ்சள் வண்ணத்துக்கும் குங்குமப்பூவே காரணமாக உள்ளது.

குங்குமப்பூவின் நறுமணம், சிறிதளவு புல் அல்லது வைக்கோல் போன்ற குணங்களைச் சிறிதளவு கொண்டு, உலோகம் சார்ந்த தேனை நினைவூட்டுவதாகவும் மற்றும் அதன் சுவை வைக்கோல் போன்றும் இனிப்பாகவும் உள்ளதாகவும் வல்லுநர்கள் விவரிக்கின்றனர். குங்குமப்பூவானது உணவுகளுக்கு பளபளப்பான மஞ்சள்-செம்மஞ்சள் வண்ணத்தையும் வழங்குகிறது. குங்குமப்பூ ஈரானிய (பாரசீக), அரபிய, மத்திய ஆசிய, ஐரோப்பிய, இந்திய, துருக்கிய மற்றும் கார்ன்வால் மக்களின் சமையல்களில் பெருமளவில் பயன்படுகிறது. இனிப்புத் தின்பண்டங்களிலும் குடிவகைகளிலும் குங்குமப்பூ பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. குசம்பப்பூ (கார்தாமஸ் டிங்டோரியஸ்-Carthamus tinctorius - இது பெரும்பாலும் "போர்த்துகேய குங்குமப்பூ" அல்லது "açafrão" என விற்கப்படும்), அனாட்டோ (annatto) மற்றும் மஞ்சள் (குர்குமா லாங்கா -Curcuma longa ) ஆகியவை பொதுவாக குங்குமப்பூவுக்கு மாற்றுப் பொருள்களாக பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவத்தில், பாரம்பரிய மருத்துவ முறைகளின் ஒரு பகுதியாக வெகு காலமாகப் பயன்பட்டுள்ளது. நவீன மருத்துவம் கூட குங்குமப்பூவில் புற்றுநோய் எதிர்ப்பு (புற்றுநோயை-அடக்குகின்ற),[20] விகார எதிர்ப்பு (விகாரத்தைத் தடுக்கின்ற), நோய் எதிர்ப்பை மாற்றுகின்ற மற்றும் ஆக்சிசனேற்றத் தடுப்பான்-போன்ற இயல்புகள் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளது.[20][65][66] குங்குமப்பூவானது, கரும்புள்ளிச் சேதம் (macular degeneration) மற்றும் மாலைக்கண் நோய் ஆகியவற்றைக் குறைப்பது மட்டுமின்றி பிரகாசமான வெளிச்சத்தின் நேரடித் தாக்கத்திலிருந்தும் விழித்திரை அழுத்த நோயிலிருந்தும் கண்களைக் காக்கிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[67][68][69] குங்குமப்பூ குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாடுகளில் துணிச்சாயமாகவும் நறுமணப்பொருள் உற்பத்தியிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[70]

உலக குங்குமப்பூப் பயிர் செய்கை மாதிரிகள்
 —  பிரதானமாக வளரும் பிரதேசங்கள்
 —  பிரதானமாக உற்பத்தியாகும் நாடுகள்
 —  சிறிதளவில் வளரும் பிரதேசங்கள்
 —  சிறிதளவில் உற்பத்தியாகும் நாடுகள்
 —  பிரதான வணிக மையங்கள் (நடப்பு)
 —  பிரதான வணிக மையங்கள் (வரலாற்றுக் காலத்தியது)

குங்குமப்பூ பயிரிடலில் பெரும்பகுதி மேற்கில் மத்தியதரைக் கடல் பகுதியிலிருந்து கிழக்கில் காஷ்மீர் வரையிலான நில மண்டலத்தில் நடக்கிறது. உலகளவில் ஓராண்டுக்கு கிட்டத்தட்ட 300 டன்கள் குங்குமப்பூ உற்பத்தி செய்யப்படுகிறது.[5] ஈரான், ஸ்பெயின், இந்தியா, கிரீஸ், அஸர்பைஜன், மொரோக்கோ, இத்தாலி (உற்பத்தி அளவின் இறங்கு வரிசையில்) ஆகியவை குங்குமப்பூவை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள். பல்வேறு குங்குமப்பூ வகைகளைப் பயிர் செய்யும் ஈரானே அதிகமாக குங்குமப்பூவை உற்பத்தி செய்யும் நாடாகும். இந்நாடு உலகின் மொத்த குங்குமப்பூ உற்பத்தியில் 93.7 சதவீதத்திற்குப் பங்களிக்கிறது.[71]

ஒரு பவுண்டு (454 கிராம்கள்) உலர் குங்குமப்பூவை உற்பத்தி செய்ய 50,000–75,000 பூக்கள் தேவை. இது ஒரு காற்பந்து மைதானத்தின் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் பயிர் செய்கைக்குச் சமமானது (ஒரு கிலோகிராமுக்கு 110,000-170,000 பூக்கள் அல்லது இரண்டு காற்பந்து மைதானங்கள் தேவை).[72][73] 150,000 பூக்களைப் பறிப்பதற்கு நாற்பது மணிநேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது.[74] ஈரப்பதத்தைப் பிரித்தெடுத்தலின் மூலம் அடுத்து சூலக முடிகள் விரைவாக உலர்த்தப்பட்டு, காற்றுப்புகாத கொள்கலன்களில் அடைக்கப்படுகின்றன.[75] குங்குமப்பூவின் மொத்தவிலையும் சில்லறை விலையும் பவுண்டு ஒன்றுக்கு 500 முதல் 5,000 அமெரிக்க டாலர்கள் வரை (1,100–11,000 அமெரிக்க டாலர்கள்/கி.கி) உள்ளன—இது பவுண்டு ஒன்றுக்கு £2,500/€3,500 அல்லது கிலோகிராம் ஒன்றுக்கு £5,500/€7,500 என்பதற்குச் சமம். அண்மையில் கனடாவில் குங்குமப்பூவின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு 18,000 கனடிய டாலர்களாக உயர்ந்தது. மேற்கத்திய நாடுகளில், சராசரியான சில்லறை விலை பவுண்டு ஒன்றுக்கு $1,000/£500/€700 (கிலோகிராம் ஒன்றுக்கு $2,200/£1,100/€1,550) ஆகும்.[2] ஒரு பவுண்டில் 70,000 முதல் 200,000 வரையிலான இழைகள் இருக்கும். பிரகாசமான கருஞ்சிவப்பு நிறம், சிறிதளவு ஈரத்தன்மை, நெகிழ்த்தன்மை, உடைந்த இழைத் துகள்கள் இல்லாமல் இருப்பது ஆகியவையே புத்தம் புது குங்குமப்பூவின் இயல்புகளாகும்.

பயிர்வகைகள்

ஈரானிலிருந்து பெறப்பட்ட சூல்தண்டுகளுடன் கலந்த குங்குமப்பூ நூல்கள் (சிவப்பு வண்ணமான சூலகமுடிகள்)

உலகெங்கும் குங்குமப்பூவின் பல பயிர்வகைகள் வளர்க்கப்படுகின்றன. 'எசுப்பானிய சுப்பீரியர்' (Spanish Superior) என்றும், 'கிரீம்' (Creme) என்றும் வணிகப்பெயர்களைக் கொண்ட எசுப்பானிய நாட்டு குங்குமப்பூ வகைகள் வண்ணம், சுவை, நறுமணம் ஆகியவற்றில் இனிமையானவை. இவை அரசாங்கம் விதித்துள்ள தரநிலைகளால் தரப்படுத்தப்படுகின்றன. மிகுந்த தீவிரமான பயிர்வகைகள் ஈரானில் தோன்றியவையாக உள்ள நிலையில், இத்தாலிய குங்குமப்பூ வகைகள் எசுப்பானிய வகைகளை விட ஓரளவு அதிக சக்தியுள்ளவை. இந்தியாவிலிருந்து குங்குமப்பூவைப் பெறுவதில் மேலை நாட்டவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு தடைகள் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, உயர் தர குங்குமப்பூவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை இந்தியா தடை செய்துள்ளது. இவை தவிர நியூசிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலிருந்து பல்வேறு சிறப்புப் பயிர்வகைகளும் (எ.கா. இயற்கை உரமிட்டு வளர்க்கப்படுபவை) கிடைக்கின்றன. அமெரிக்காவில், மண்வாசனையுடைய பென்சில்வேனிய டச்சுக் குங்குமப்பூ (Pennsylvania Dutch saffron) சிறிய அளவுகளில் விற்கப்படுகிறது.[61][76]

தனித்த குரோக்கசு நூலின் (உலர்ந்த சூலகமுடி) அண்மைக்காட்சி. உண்மையான நீளம் தோராயமாக 20 மி.மீ ஆகும்.

நுகர்வோர்கள் குறிப்பிட்ட சில பயிர்வகைகளை உயர்தரம் எனக் குறிக்கிறார்கள். அதிக சாஃப்ரானல், குரோசின் உள்ளடக்கம், வடிவம், வழக்கத்துக்கு மாறாக நெடியுடைய நறுமணம் , அடர் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் "அக்குய்லா" குங்குமப்பூ (zafferano dell'Aquila), இத்தாலியின் லோக்கீலா பகுதிக்கு அருகில் உள்ள நவெல்லி பள்ளத்தாக்கில் எட்டு ஹெக்டேர் பரப்பளவில் பிரத்யேக முறையில் வளர்க்கப்படுகிறது. இதைப் புனித விசாரணை-காலகட்ட எசுப்பானியாவிலிருந்து வந்த ஒரு டாமினிக்கிய துறவி இத்தாலியில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். ஆனால், இத்தாலியில் தரத்தையும் அளவையும் பொருத்த வரை மிகப்பெரிய அளவில் குங்குமப்பூ பயிர் செய்யும் இடம் சார்டினியாவில் உள்ள சான் கவினோ மான்ரியாலெ (San Gavino Monreale) பகுதியில் உள்ளது. இப்பகுதியில் 40 ஹெக்டேர் நிலப்பரப்பில் (இத்தாலிய உற்பத்தியின் 60%) குங்குமப்பூச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. இது மிக உயர்ந்தளவு குரோசின், பிக்ரோகுரோசின், சாஃப்ரானல் உள்ளடக்கங்களையும் கொண்டுள்ளது. மற்றொன்று காஷ்மீரி "மாங்ரா" அல்லது "லசா" குங்குமப்பூ (குரோக்கசு சட்டைவசு 'காஷ்மீரியானஸ்') ஆகும். நுகர்வோருக்கு எளிதில் கிடைக்காத வகைகளில் இதுவும் ஒன்றாகும். காஷ்மீரில் அடுத்தடுத்து வந்த வறட்சி காலங்கள், கருகல் நோய்கள், பயிர் செய்கையில் தோல்விகள் ஆகியவையும் ஏற்றுமதிக்கு இந்தியாவின் தடையும் சேர்ந்து இவற்றின் விலை அதிகமாகக் காரணமாகின்றன. வலிமையான சுவை, நறுமணம், வண்ணமூட்டும் விளைவு ஆகியவற்றின் அடையாளமான மிக அடர்ந்த மெரூன்-ஊதா வண்ணம் கொண்ட காஷ்மீர் குங்குமப்பூ வகை உலகின் அடர்நிற குங்குமப்பூ வகைகளில் ஒன்றாக விளங்குகின்றது.

தரம்

குறைந்தபட்ச குங்குமப்பூ வண்ணம்
தரப்படுத்தல் தரநிலைகள் (ஐ.எஸ்.ஓ 3632)
ஐ.எஸ்.ஓ தரம்
வகை
குரோசின்-பிரத்தியேக
அகத்துறிஞ்சல் (Aλ) புள்ளி
(at λ=440 நா.மீ)
I > 190
II 150–190
III 110–150
IV 80–110
மூலம்: வார்ப்புரு:Harvnb

குங்குமப்பூ அதன் குரோசின் (வண்ணம்), பிக்ரோகுரோசின் (சுவை), சாஃப்ரானல் (நறுமணம்) ஆகியவற்றின் உள்ளடக்கங்களை ஆய்வுகூடங்களில் அளப்பதன் மூலம் தரப்படுத்தப்படுகிறது. சூலகமுடி அல்லாத பொருள்களும் ("பூவுக்குரிய கழிவுப் பகுதி"), உயிரியல் சாராத பொருள் ("சாம்பல்") போன்ற மற்ற புறம்பான பொருள்களும் கலந்திருப்பதைக் கண்டறிதலும் இதில் முக்கியமாகக் கருதப்படுகிறது. தேசிய தரநிலைகள் அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பான தர நிர்ணயத்துக்கான சர்வதேச நிறுவனம் தரநிலைகளை அமைக்கிறது. ஐ.எஸ்.ஓ 3632 பிரிவு பிரத்தியேகமாக குங்குமப்பூவுக்கானதாகும். இது, சோதனை அடிப்படையிலான நிறச் செறிவு பொருத்து நான்கு வகையான தரங்களை அமைக்கிறது, அவை: IV (மிகமோசமானது), III, II, மற்றும் I (மிகச்சிறந்த தரம்) ஆகியவையாகும். குங்குமப்பூவின் மாதிரிகள், குரோசினுக்கான பிரத்தியேக ஒளிக்கதிர் ஆய்வுக் கருவியின் அளவீட்டின் மூலம் அவற்றிலுள்ள குரோசின் உள்ளடக்கத்தின் அகத்துறிஞ்சல் வலுவை அளவிடுவதன் மூலமாக தரப்படுத்தப்படுகின்றன. அகத்துறிஞ்சல் வலுவானது Aλ=log(I/I0) என வரையறுக்கப்படுகிறது (பீயர்-லாம்பர்ட்டு விதி -Beer-Lambert law). இதில் Aλ என்பது அகத்துறிஞ்சல் வலுவாகும். மேலும் இது கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட அலைநீலம் கொண்ட ஒளியினுடைய, பொருளின் ஒளி ஊடுபுகவிடும் தன்மையின் அளவைக் குறிக்கிறது. (I/I0 என்பது மாதிரியிலிருந்து வெளியேறுகின்ற ஒளியின் செறிவுக்கும் விழும் ஒளியின் செறிவுக்கும் உள்ள விகிதமாகும்).

எசுப்பானிய தேசிய குங்குமப்பூ
தரப்படுத்தல் தரநிலைகள்
தரம் ஐ.எஸ்.ஓ புள்ளி
கூப் (Coupe) > 190
லா மாஞ்சா (La Mancha) 180–190
ரியோ (Río) 150–180
ஸ்டாண்டர்ட் (Standard) 145–150
சியரா (Sierra) < 110
மூலம்: வார்ப்புரு:Harvnb

தரப்படுத்துபவர்கள் உலர் குங்குமப்பூ மாதிரிகளின் 440-நா.மீ அலைநீளம் கொண்ட ஒளிக்கான அகத்துறிஞ்சல் வலு மதிப்புகளை அளக்கிறார்கள்.[77] அகத்துறிஞ்சல் வலுவின் மதிப்பு அதிகமாக இருப்பது குரோசின் செறிவு அதிகமாக உள்ளதையும் அதிக வண்ணங்கொடுக்கும் ஆற்றலையும் குறிக்கிறது. இந்தத் தரவுகள் உலகெங்கும் உள்ள சான்றளிக்கப்பட்ட சோதனை ஆய்வுகூடங்களில் நிறமாலை ஒளிமானியியல் அறிக்கைகள் வழியாக அளக்கப்படுகின்றன. இந்த வண்ணத் தரங்கள் 80 ஐ விடக் குறைந்த அகத்துறிஞ்சல் வலு மதிப்பு (வகை IV குங்குமப்பூக்களுக்குரியது) முதல் 190 அல்லது அதிலும் அதிகமான அகத்துறிஞ்சல் வலு மதிப்பு (வகை I க்கு உரியது) வரை உள்ளன. உலகின் மிகச்சிறந்த மாதிரிகள் (மிகச்சிறந்த பூக்களிலிருந்து பறிக்கப்பட்ட, சூலகமுடிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக சிவப்பு-மெரூன் நுனிகள்) 250 க்கும் மேற்பட்ட அகத்துறிஞ்சல் வலு மதிப்புகளைக் கொண்டுள்ளன. குங்குமப்பூ வகைகளுக்கான சந்தை விலைகள் நேரடியாக இந்த ஐ.எஸ்.ஓ புள்ளிகளைப் பொருத்தே அமைகின்றன.[77] எனினும் பல விவசாயிகளும், வணிகர்களும், நுகர்வோர்களும் இதுபோன்ற ஆய்வுகூட தரவுகளை ஏற்பதில்லை. அவர்கள் வைன் சுவைத் தேர்வாளர்கள் பின்பற்றுவதைப் போன்ற ஒரு தரப்படுத்தும் அவர்களுக்கு நிறைவுதரும் முறையை விரும்புகிறார்கள். இதில் இழைகளின் தொகுதிகளை மாதிரிகளாகக் கொண்டு அவற்றின் சுவை, நறுமணம், இசையுந்தன்மை மற்றும் பிற இயல்புகளைப் பொருத்து தரப்படுத்துகின்றனர்.[78]

தரக்கட்டுப்பாட்டிலும் தரநிலையாக்கத்திலும் இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், வரலாற்றுக் காலங்களிலிருந்து தொடரும் குங்குமப்பூக் கலப்படம், குறிப்பாக விலைகுறைந்த வகைகளில் தற்காலத்திலும் தொடர்கின்றது. குங்குமப்பூக் கலப்படமானது முதன் முதலில் ஐரோப்பாவின் மத்திய காலப்பகுதியில் ஆவணமாக்கப்பட்டது. அப்போது கலப்படம் செய்யப்பட்ட குங்குமப்பூவை விற்பனை செய்தவர்கள் சாஃரன்சு சட்டத்தின் படி தூக்கிலிடப்பட்டார்கள்.[79] குங்குமப்பூவுடன் பீட்டுக் கிழங்குகள், மாதுளை நார்கள், சிவப்புச் சாயமிடப்பட்ட பட்டு நார்கள் அல்லது சாஃப்ரன் குரோகசின் சுவையற்ற, மணமற்ற மஞ்சள் மகரந்தக் கேசரங்கள் போன்ற புறப் பொருள்களைக் கலப்பது போன்றவை பொதுவான கலப்பட முறைகளாகும். பிற முறைகளில் குங்குமப்பூ இழைகள் தேன் அல்லது காய்கறி எண்ணெய் போன்ற பாகுப் பொருள்களில் ஊற வைக்கப்படுகின்றன. எனினும், தூளாக்கப்பட்ட குங்குமப்பூவில் மஞ்சள், சிவப்பு மிளகு, செறிவைக் குறைக்கின்ற நிரப்பிகளாகப் பயன்படுத்தப்படும் பிற தூள்கள் ஆகியவற்றைக் கொண்டு கலப்படம் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. வேறுபட்ட தர குங்குமப்பூ வகைகளைக் கலந்து தவறான பெயர்ச்சீட்டுகள் ஒட்டி விற்பதன் மூலமாகவும் கலப்படம் செய்யப்படுகிறது.[39] இவ்வாறு இந்தியாவில் பெரும்பாலும் உயர் தரமான காஷ்மீரி குங்குமப்பூவானது விலைகுறைவான ஈரானிய இறக்குமதி வகைக் குங்குமப்பூவுடன் கலக்கப்படுகிறது. இந்தக் கலவைகள் பின்னர் சுத்தமான காஷ்மீர் குங்குமப்பூ எனக் கூறி சந்தையிலேற்றப்படுகிறது. இவ்வாறான செய்கையின் அதிகரிப்பால் காஷ்மீர் விவசாயிகளுக்கு பெரும் வருமான இழப்பு உண்டாகிறது.[80][81]

மேலும் படிக்க

மேற்கோள்கள்

குரோக்கசு சட்டைவசு, ஒசாகா ப்ரிபெக்ட்சர் (大阪府), ஜப்பான்
குரோக்கசு சட்டைவசு மலர்

வார்ப்புரு:Reflist

மேற்கோள் உதவிகள்

வார்ப்புரு:Refbegin

வார்ப்புரு:Refend

புற இணைப்புகள்

வார்ப்புரு:Commons

  1. வார்ப்புரு:Harvnb
  2. 2.0 2.1 2.2 வார்ப்புரு:Harvnb
  3. வார்ப்புரு:Harvnb
  4. 4.0 4.1 வார்ப்புரு:Harvnb
  5. 5.0 5.1 5.2 5.3 வார்ப்புரு:Harvnb
  6. வார்ப்புரு:Citation
  7. வார்ப்புரு:Citation
  8. வார்ப்புரு:Harvnb
  9. 9.0 9.1 9.2 9.3 வார்ப்புரு:Harvnb
  10. வார்ப்புரு:Cite web
  11. M. Grilli Caiola - Saffron reproductive biology
  12. வார்ப்புரு:Harvnb
  13. வார்ப்புரு:Harvnb
  14. வார்ப்புரு:Harvnb
  15. வார்ப்புரு:Harvnb
  16. 16.0 16.1 வார்ப்புரு:Harvnb
  17. வார்ப்புரு:Harvnb
  18. வார்ப்புரு:Harvnb
  19. 19.0 19.1 வார்ப்புரு:Harvnb
  20. 20.0 20.1 20.2 20.3 20.4 வார்ப்புரு:Harvnb
  21. 21.0 21.1 வார்ப்புரு:Harvnb
  22. 22.0 22.1 வார்ப்புரு:Harvnb
  23. வார்ப்புரு:Harvnb
  24. 24.0 24.1 வார்ப்புரு:Harvnb
  25. வார்ப்புரு:Harvnb
  26. வார்ப்புரு:Harvnb
  27. 27.0 27.1 வார்ப்புரு:Harvnb
  28. வார்ப்புரு:Harvnb
  29. வார்ப்புரு:Harvnb
  30. வார்ப்புரு:Harvnb
  31. வார்ப்புரு:Harvnb
  32. வார்ப்புரு:Harvnb
  33. 33.0 33.1 வார்ப்புரு:Harvnb
  34. வார்ப்புரு:Harvnb
  35. வார்ப்புரு:Harvnb
  36. வார்ப்புரு:Harvnb
  37. 37.0 37.1 வார்ப்புரு:Harvnb
  38. வார்ப்புரு:Harvnb
  39. 39.0 39.1 வார்ப்புரு:Harvnb
  40. வார்ப்புரு:Citation
  41. வார்ப்புரு:Harvnb
  42. வார்ப்புரு:Harvnb
  43. வார்ப்புரு:Harvnb
  44. வார்ப்புரு:Harvnb
  45. வார்ப்புரு:Harvnb
  46. வார்ப்புரு:Harvnb
  47. வார்ப்புரு:Harvnb
  48. 48.0 48.1 வார்ப்புரு:Harvnb
  49. வார்ப்புரு:Harvnb
  50. வார்ப்புரு:Harvnb
  51. வார்ப்புரு:Harvnb
  52. Celsus, de Medicina, ca. 30 AD, transl. Loeb Classical Library Edition, 1935 [1]
  53. வார்ப்புரு:Harvnb
  54. வார்ப்புரு:Harvnb
  55. 55.0 55.1 வார்ப்புரு:Harvnb
  56. வார்ப்புரு:Harvnb
  57. வார்ப்புரு:Harvnb
  58. வார்ப்புரு:Harvnb
  59. வார்ப்புரு:Harvnb
  60. வார்ப்புரு:Harvnb
  61. 61.0 61.1 61.2 வார்ப்புரு:Harvnb
  62. வார்ப்புரு:Harvnb
  63. வார்ப்புரு:Harvnb
  64. வார்ப்புரு:Harvnb
  65. வார்ப்புரு:Harvnb
  66. வார்ப்புரு:Harvnb
  67. http://www.iovs.org/cgi/content/abstract/49/3/1254
  68. வார்ப்புரு:Cite web
  69. வார்ப்புரு:Cite web
  70. வார்ப்புரு:Harvnb
  71. http://www.idosi.org/wasj/wasj4%284%29/7.pdf
  72. வார்ப்புரு:Harvnb
  73. வார்ப்புரு:Harvnb
  74. வார்ப்புரு:Harvnb
  75. வார்ப்புரு:Harvnb
  76. வார்ப்புரு:Harvnb
  77. 77.0 77.1 வார்ப்புரு:Harvnb
  78. வார்ப்புரு:Harvnb
  79. வார்ப்புரு:Harvnb
  80. வார்ப்புரு:Harvnb
  81. வார்ப்புரு:Harvnb
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=குங்குமப்பூ&oldid=413" இலிருந்து மீள்விக்கப்பட்டது