தாமிரம்(II) சிடீயரேட்டு
தாமிரம்(II) சிடீயரேட்டு (Copper(II) stearate) Cu(C17H35COO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் உலோகக் கரிமச் சேர்மமாகும்.[1][2] தாமிரமும் சிடீயரிக் அமிலமும் வினை புரிவதால் இந்த உப்பு உருவாகிறது. இச்சேர்மம் ஓர் உலோக சோப்பாக அதாவது கொழுப்பு அமிலத்தின் உலோக வழிப்பெறுதியாக வகைப்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
சோடியம் சிடீயரேட்டும் தாமிர சல்பேட்டும் பரிமாற்ற வினையில் ஈடுபடுவதால் தாமிரம்(II) சிடீயரேட்டு உருவாகிறது.:[3][4]
இயற்பியல் பண்புகள்
தாமிரம்(II) சிடீயரேட்டு ஒரு நீல-பச்சை நிறத்திலான படிக உருவமற்ற வேதிப் பொருளை உருவாக்குகிறது.[5] தோற்றம் மற்றும் தொடுதல் ஆகிய இரண்டு பண்புகளிலும் பிளாசுட்டிசின் உப்பைப் போன்றதாகும்.
தண்ணீர், எத்தனால், மெத்தனால் போன்ற கரைப்பான்களில் இது கரையாது.
ஈதர், பிரிடின், சூடான பென்சீன் மற்றும் குளோரோஃபார்ம் போன்ற கரிமக் கரைப்பான்களில் இது கரைகிறது.
வேதிப் பண்புகள்
இயல்பான நிலைகளில் இச்சேர்மம் நிலைப்புத்தன்மை கொண்டதாகவும் வினைத்திறன் அற்றும் காணப்படுகிறது.[6]
பற்றவைக்க முயற்சிக்கும்போது, தாமிர சிடீயரேட்டு முதலில் உருகி, பின்னர் கீழ்பகுதியில் பச்சை நிறச் சுடருடன் எரியத் தொடங்குகிறது. பின்னர் குப்ரிக் ஆக்சைடு உருவாவதால் இது விரைவாக கருப்பு நிறமாக மாறும்:
பயன்கள்
- பொருள்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் சாயங்கள், மேற்பூச்சுகள் தயாரிப்பில் பயன்படுகிறது.
- வெண்கலச் சிற்பங்களை வார்ப்பதில் ஒரு அங்கமாகவும் பயன்படுத்தப்படுகிறது.[7]
- ஐதரோபெராக்சைடுகளை சிதைக்கும் வினைகளில் வினையூக்கியாகப் பயன்படுகிறது.[8]