தோரியம் மோனாக்சைடு
தோரியம் மோனாக்சைடு (Thorium monoxide) என்பது ThO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியத்தின் இருநிலை ஆக்சைடான இச்சேர்மம் தோரியம்(II) ஆக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஈரணு மூலக்கூறிலுள்ள சகப்பிணைப்பு உயர் முனைவுத்திறன் கொண்டதாக உள்ளது. இரண்டு அணுக்களுக்கிடையிலுள்ள மின்புலம் ஒரு சென்டிமீட்டருக்கு 88 கிகாவோட்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. அறியப்பட்டுள்ள அணுக்களுக்கு இடையிலான அதிக அகமின்புலங்களில் இதுவும் ஒன்றாகும் [1].
சாதாரணமாக தோரியம் காற்றில் எரிந்து தோரியம் டையாக்சைடைக் கொடுக்கிறது. தோரியத்தின் மீது ஆக்சிசன் முன்னிலையில் லேசர் கற்றையைச் செலுத்தி கதிர்வீச்சுத் தாக்கம் செய்யும்போது தோரியம் மோனாக்சைடு உருவாகிறது [2]. தோரிய மென் படலத்தின் மீது குறைவழுத்த ஆக்சிசனை மிதமான வெப்பநிலையில் செலுத்தும் போதும் அதிக நிலைப்புத்தன்மை கொண்ட டையாக்சைடு மேற்பூச்சின் மீது தோரியம் மோனாக்சைடு அடுக்கு விரைவாக வளர்கிறது [3].
1580° செல்சியசுக்கும் அதிகமான உயர் வெப்பநிலைகளில் தோரியம் டையாக்சைடை விகிதச்சமமில்லா வினையின் மூலம் தோரியம் மோனாக்சைடாக மாற்ற இயலும். (நீர்ம தோரியம் உலோகத்துடன் வேதிச்சமநிலை) அல்லது 2230° செல்சியசு வெப்பநிலையில் எளிய ஆக்சிசன் பிரிகை வினையின் வழியாகவும் மாற்றலாம் [4].